டுவிட்டர் மீது வழக்கு பதிவு செய்யும் என்.சி.பி.சி.ஆர்

தவறான தகவல்களை வழங்கியதற்காக டுவிட்டருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) டெல்லி காவல்துறையிடம் கேட்டுக்கொண்டது. ஆன்லைன் தளங்களில் கிடைக்கும் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக விஷயங்களை (சி.எஸ்.ஏ.எம்) தடுக்கவும் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறியவும் என்.சி.பி.சி.ஆர் அமைப்பு, கூகிள், ட்விட்டர், வாட்ஸ்அப், ஆப்பிள் இந்தியா போன்ற நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் சி.எஸ்.ஏ.எம் 95% உயர்ந்துள்ளது என்று ஒரு ஆய்வையும் மேற்கோள் காட்டியது குழந்தைகள் உரிமை ஆணையம்.சி.எஸ்.ஏ.எம் கூகிள் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் அணுகக்கூடியவை என்று கண்டறியப்பட்டுள்ளது.வாட்ஸ்அப்பைப் பொறுத்தவரை, சி.எஸ்.ஏ.எம்மை பகிர்ந்து கொள்ளும் ஏராளமான மறைக்கப்பட்ட பல வாட்ஸ்அப் குழுக்கள் இயங்குகின்றன என்று அது கூறியது.

இந்நிலையில், இது குறித்த விசாரணையில், டுவிட்டர் இந்தியா நிறுவனம் தங்களுக்கும் அமெரிக்காவை சேர்ந்த டுவிட்டர் இன்க் நிறுவனத்துக்கும் சம்பந்தம் இல்லை, டுவிட்டரில் பகிரப்பட்ட உள்ளடக்கத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் கூறியது. ஆனால் டுவிட்டர் கம்யூனிகேஷன்ஸ் இந்தியாவின் பின்னணியை என்.சி.பி.சி.ஆர் ஆய்வு செய்தபோது, ​​நிறுவனம் 10,000 பங்குகளை வெளியிட்டுள்ளது, அவற்றில் 9,999 பங்குகள் டுவிட்டர் இன்க் நிறுவனத்திற்கு சொந்தமானவை. டுவிட்டர் கம்யூனிகேஷன்ஸ் இந்தியாவின் குழுவில் உள்ள மூன்று இயக்குநர்களில் இரண்டு பேர் ட்விட்டர் இன்க் நிறுவன ஊழியர்கள் என கண்டறிந்தது. எனவே அரசுத் துறையிடம் பொய்யான தகவலை வழங்கியது, போக்ஸோ சட்டத்தை மீறியது, தங்கள் தாய் நிறுவனத்துடன் தொடர்பு இல்லை என்று பொய் கூறியது போன்ற காரணங்களுக்காக டுவிட்டர் இந்தியாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் ,இதைப் போன்ற மைக்ரோ பிளாக்கிங் தளத்திற்கான அணுகல், குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக மாறும்வரை அவற்றை குழந்தைகள் அணுக தடை விதிக்க வேண்டும், என்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.