பாரத நாட்டில் பன்னெடுங்காலமாக இயற்கை விவசாயம் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்தது. இதற்காக விவசாயிகள் தேவையான அனைத்தையும் உரம், விதை, பணியாளர்கள், சேமிப்பு மற்றும் பதப்படுத்தி பாதுகாக்கும் தொழில்நுட்பம் என அனைத்தும் அறிந்து தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். சுயமாக விவசாயிகள் உற்பத்தி செய்து தங்களுடைய வருவாயில் சுமார் 25% அரசுக்கு வரியாக செலுத்தி வந்தனர். அதாவது தங்கள் உற்பத்தியில் விளைப்பொருளுக்கு ஏற்ப விளைச்சலில் 6-ல் ஒரு பங்கு அல்லது 4-ல் ஒரு பங்கு என செலுத்தி வந்தனர்.
சுதந்திர பாரதத்தில் விவசாயம் அழிவுப்பாதையில் செல்லத் துவங்கியது. தொடர்ந்து பசுமை புரட்சி என்ற பெயரில் 2-வது ஐந்தாண்டு திட்டத்திற்கு பிறகு விவசாயிகளுடைய வருவாய் சுரண்டப்பட்டது. இதனால் இன்றைக்கு உரம், பூச்சிமருந்து, தொழில்நுட்பம் என வெளிநாட்டை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.பாரதிய கிசான் சங்கம் பசு சார்ந்த இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கிறது. விவசாயிகளிடத்தில் பிரச்சாரம் செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து இயற்கை விவசாயத்தில் ஆர்வத்தைப் பரப்பி வருகிறது.
அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா ஆகிய பகுதிகளில் முற்றிலும் இயற்கை விவசாயம் என்ற நிலைக்கு மக்களை பாரதிய கிசான் சங்கம் தன்னுடைய முயற்சியினால் மாற்றியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பாரதிய கிசான் சங்கம் பஞ்சகவ்வியம், மண்புழு உரங்கள், இயற்கை பூச்சி விரட்டிகள் குறித்து விழிப்புணர்வுக்காக பயிற்சிகள் வழங்கி விவசாயி அவற்றை நடைமுறைப்படுத்த முற்பட்ட போது பெரிய அளவில் எதிர்ப்பு இருந்தது. ஆனாலும் ஆண்டு 2000க்குப் பிறகு பிற அமைப்புகளும் நாடும் சூழல் ஏற்பட்டது. நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தை விவசாயிகளிடத்தில் பெரிய அளவில் எடுத்துச் சென்றார். பாரதிய கிசான் சங்கம் ஏற்பாடு செய்த தேசிய நெல் கருத்தரங்கில் நம்மாழ்வார் கலந்து கொண்டு “நான் விஷயங்களை கூற வரவில்லை, நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
பாரதிய கிசான் சங்கம் இயற்கை விவசாயத்தை விவசாயிகளிடத்தில் கொண்டு செல்வதில் முன்னோடியாக செயல்படுகிறது. வரும் காலங்களில் தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயம் செழிக்கும்” என கூறினார். ஐயாவின் வாக்கு இன்றைக்கு சாத்தியமாகும் சூழ்நிலை உருவாகிவருகிறது.பாரதிய கிசான் சங்கத்தின் முயற்சியினால் இன்றைக்கு தமிழகம் முழுவதும் நிறைய இளைஞர்கள் காலத்தின் தேவையை உணர்ந்து இயற்கை விவசாயம் செய்ய முன்வந்துள்ளனர். நாட்டின் பொருளாதாரம் உயரவும், நம் பொருளாதாரம் மேன்மையடைவும் இயற்கை விவசாயமே சிறந்தது என இளைஞர்கள் உணர்கிறார்கள்.
பாரம்பரிய நெல் ரகங்கள் காக்கப்பட்டு தமிழகம் முழுவதும் தங்களுடைய வயல்களில் 25மூ அளவில் துவங்கிய விவசாயிகள் இன்றைக்கு தங்களுடைய கிராமத்தில் உள்ள வயல்களில் 25% கொண்டு சென்றுள்ளார்கள்.திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், நெய்குப்பை தெற்கு வருவாய் கிராமத்தில் சுமார் 800 ஏக்கர் நிலம் பங்குனி ஆற்று வாய்க்கால் பாசனத்தில் பயிரிடப்படுகிறது. இங்கு சுமார் 60 விவசாயிகள் தங்களுடைய 150 ஏக்கர் நிலத்தில் கடந்த சம்பா பருவத்தில் குதிரைவாலி, மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி போன்ற பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வருவாய் ஈட்டினர். இதன் தொடர்ச்சியாக மற்ற கிராமங்களிலும் இயற்கை விவசாயம் செய்யக்கூடிய விளைநிலங்கள் உருவாகி வருகின்றன. எதிர்காலம் இயற்கை விவசாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழகமும், முற்றிலும் இயற்கை விவசாயம் செய்யக்கூடிய நிலைக்கு வெகு விரைவில் மாறும் என்பதற்கு இதுவொரு உதாரணம்.
பாரதிய கிசான் சங்கம் அகில பாரத அளவில் இயற்கை விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளுக்கான ஒரு தகவல் தொகுப்பை தயார் செய்தது. அதை விவசாயி பயன்படுத்தியதில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து ஒன்றியங்களிலும் இயற்கை விவசாயம் அறிமுகமாகியுள்ளது. இயற்கை விவசாய ஆர்வலர்களைக் கொண்டு அனைத்து கிராமங்களிலும் கோமாதா சார்ந்த இயற்கை விவசாய ஆர்வத்தை ஏற்படுத்த பாரதிய கிசான் சங்கம் திட்டமிட்டு வருகிறது. எனவே இனி தமிழகம், முற்றிலும் இயற்கை விவசாய மாநிலமாக மாறும்.
கட்டுரையாளர் : மாநில செய்தித்தொடர்பாளர், பாரதிய கிசான் சங்கம்