மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வரும் 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை ஒரு வார கால சுதந்திர அமிர்தப் பெருவிழா சிறப்பு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்நாள் மற்றும் முன்னாள் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்காக அன்வேஷா 2022 (ANVESHA – 2022) என்னும் வினாடி வினா போட்டியை வரும் 27ம் தேதி மாநில தலைநகரங்களில் அந்தந்த பிராந்திய அலுவலகங்களால் நடத்தப்படுகிறது. நாடு சுதந்திரமடைந்த 75வது வருட கொண்டாட்டத்தில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் அவர்களிடையே அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தப் போட்டி நடத்தப்படுவதாகவும், இதில் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றும் தேசிய புள்ளியியல் சென்னை மண்டல அலுவலகத்தின் துணைத் தலைமை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு தமிழக வடக்கு தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் கள இயக்கப்பிரிவு மூலம் நடத்தப்படும். இதனை சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் திட்டம் மற்றும் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர் தொடங்கி வைக்கிறார். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஐ.ஐ.டி இயக்குனர் பேராசிரியர் வி காமகோடி பரிசுகளை வழங்குகிறார். முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000 என ரொக்கப் பரிசு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.