மத்திய இணையமைச்சர் முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஆகஸ்ட், 13 முதல் 15 வரை வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றும் இயக்கம் துவங்க உள்ளது இதன் வாயிலாக, சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்களை, இன்றைய இளைய சமூகத்தினர் அறிய முடியும். மத்திய அரசு, நாடு முழுதும் கூடுதலாக 24 ஆயிரம் கிராமங்களுக்கு, ‘4ஜி’ அலைவரிசை வழங்க சமீபத்தில் ஒப்புதல் அளித்து அதற்காக ரூ. 26 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. அதில் தமிழகத்தில் கூடுதலாக, 534 கிராமங்களுக்கு ‘பிராட் பேண்ட்’ சேவை வழங்கப்படும். மத்திய அரசு திட்டத்தில், தெருவோர வியாபாரிகளுக்கு பிணை இல்லாமல, 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. அதில் தமிழகத்தில் ஏற்கனவே 1.59 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். கூடுதலாக, 75 ஆயிரம் பயனாளிகள் அடையாளம் காணப்படுவார்கள். அதில் 45 ஆயிரம் பேருக்கு நிதியுதவி வழங்கப்படும். வரும் செப்டம்பர் 17ல் கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் கொண்டாடப்படுகிறது. அன்று மிகப்பெரிய அளவில் நாடு முழுதும் உள்ள முக்கிய கடற்கரைகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். சென்னை மெரினா, காசிமேடு மீன்பிடி துறைமுகம், தூத்துக்குடி உள்ளிட்ட நாடு முழுதும் உள்ள முக்கிய கடற்கரைகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். காசிமேடு மீன்பிடி துறைமுக மேம்பாட்டி பணி விரைவில் துவங்கப்படும்” என தெரிவித்தார்.