ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி

சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு கடந்த ஓராண்டாக, ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெயரில் தேசமெங்கும் கொண்டாடப்படுகிறது. இது வரும் ஆகஸ்ட் 15ல் நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு மத்திய அரசின்  சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், உயர் அதிகாரிகளுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து அமித் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைப்படி, ‘ஹர் கர் திரங்கா’ எனப்படும் ‘ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி’ என்ற பிரசாரம் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வரும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, நாடு முழுதும் 20 கோடி வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் நமது தேசியக் கொடி பறக்க விடப்படும். இந்த மாபெரும் இயக்கத்தில் தனியார் நிறுவனங்களும் பங்கேற்க வேண்டும். வரும் 22ம் தேதி முதல், அரசின் அனைத்து இணையதள முகப்பு பக்கங்களில் தேசியக்கொடி இருக்கும்.பொதுமக்கள் தேசியக்கொடியுடன் ‘செல்பி’ எடுத்து, சமூக வலைதளம் மற்றும் கலாசார அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்’ என கூறினார்.

நாம் அனைவரும் ‘ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி’ என்ற இந்த அருமையான இயக்கத்தில் பங்குகொள்வோம், நமது வீடு, அலுவலகம், தொழிற்சாலைகளில் தேசியக்கொடியை ஏற்றுவோம். சுதந்திரத்தின் மாண்பை போற்றுவோம்.