மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நடத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2019 – 21ன் கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த கணக்கெடுப்பு, பாரத்தின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மக்கள் தொகை, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய தகவல்களை வழங்குகிறது. இதன்படி, மொத்த கருவுறுதல் சதவீதம் (ஒரு பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைகள்) 2015 – 16ல் 2.2 ஆக இருந்தது. அது தற்போது 2 ஆகக் குறைந்துவிட்டது. இது நகர்ப்புறங்களுக்கான 1.6 ஆகவும், கிராமப்புறங்களுக்கு 2 ஆகவும் உள்ளது. இது ஐ.நா. மக்கள்தொகைப் பிரிவால் வரையறுக்கப்பட்ட கருவுறுதல் விகிதமான 2.1 என்ற மாற்று விகிதத்தைக் காட்டிலும் குறைவாக உள்ளது. இந்த மாற்று விகிதம் என்பது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மக்கள்தொகை மாற்றத்தை குறிக்கும். 2.1க்கு கீழே என்பது மக்கள் தொகை குறையத் தொடங்கும் என்பதன் வரையறை. இது, அதிக மக்கள்தொகை வளர்ச்சி என்ற பிரச்சனை இனி பாரதத்தில் பெரிய கவலையாக இருக்காது. ஆனால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் சட்ட நடவடிக்கைகள் இதில் எதிர்விளைவுகளை உருவாக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் குடும்பக் கட்டுப்பாடு முறைகளின் பயன்பாடு 53.5 சதவீதத்தில் இருந்து 66.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. 18 வயதுக்கு முன் திருமணம் செய்து கொள்வது 26.8 சதவீதத்தில் இருந்து 23.3 சதவீதமாக குறைந்துள்ளது என்ற தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.