திருச்சி அண்ணா நகர் கேந்திரிய வித்யாலயா மற்றும் பழங்கனாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசுப் பள்ளி உட்பட பல கல்விநிறுவனங்கள் புதிய கல்விக் கொள்கை அம்சங்களை பின்பற்றத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக மக்களிடம் தெரிவித்தாலும், இதுவரை நேரடியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ மத்திய அரசிடம் இதுகுறித்து தெரிவிக்கவில்லை. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பித்து வருகின்றன. இதனால், புதிய கல்விக் கொள்கை விரைவில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும். தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை துவக்க மத்திய அரசு தயாராக உள்ளது. மாநில அரசு அதற்கான அறிக்கைகளை சமர்ப்பித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் நவயோதயா பள்ளிகள் அமைக்கப்படும். பாரதம் முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் கேட்பவர்களுக்கு நமது பள்ளிகள் அமைத்துத் தரப்படும். மத்திய பல்கலைக் கழகத்தின் கிளை திருச்சியில் கொண்டு வருவதற்கு தமிழக அரசு நிலம் கொடுத்தால் அது குறித்தும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தமிழகத்தின் வளர்ச்சியில் மத்திய அரசு மிகுந்த அக்கறைகொண்டுள்ளது. புதிய கல்விக்கொள்கைப்படி புதிய பாடதிட்டத்தை மத்திய அரசு தயார் செய்து அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளது. பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிப்பதில் உள்ள வழக்கமான நெறிமுறைகளை தான் பின்பற்ற வேண்டும். அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் ஆளுநர் தான் வேந்தர் என்பதால் அவருக்கே அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசு தேடுதல் குழு அமைத்து தேர்வு செய்பவர்களில் இருந்து துணைவேந்தரை ஆளுநர் நியமிப்பார். இதில் அரசியல் கிடையாது.தமிழக மக்களிடையே பா.ஜ.க மீதான ஆதரவு பெருகி வருவதையும் காண முடிகிறது. இதனால், வரும் 2024ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 இடங்களில் 20 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும்” என நம்பிக்கை தெரிவித்தார்.