மதுரையில், சுப்புலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, பாரதிய சிக்ஷன மண்டல் மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து, ‘தேசிய கல்விக் கொள்கை 2020’ கருத்தரங்கை நடத்தியது. இதில் பேசிய அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ‘இதுவரை ஏழு கல்விக் கொள்கைகள் வெளியாகியுள்ளன. ஆனால், அமல்படுத்த முடியவில்லை. மனிதவள மேம்பாட்டில், 30 ஆண்டுகளாக நாம் 130வது இடத்தில் உள்ளோம். கல்வியில் போதிய சாதனைகள் இல்லாததே இதற்கு காரணம். திறமையில்லாத நிர்வாகம், ஊழல் உள்ளிட்ட காரணங்களால், அறிவுசார் இளைஞர்கள் உருவாகவில்லை. மதிப்பெண் எடுக்க கற்றுக் கொடுக்கும் கல்வி மட்டுமே தற்போது நடைமுறையில் உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கான பங்களிப்பை கற்றுக் கொடுத்து, சிந்தனை திறன் மிக்க இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் கல்வியே தற்போது தேவை. தேசத்தில் விவசாயம் உட்பட அனைத்து துறைகளும் பின்தங்கியிருந்த நிலையில், பிரதமர் மோடியால் இந்நிலை மாறி வருகிறது. திறன்சார் பள்ளிக்கல்வி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, சிந்தனை திறனை வளர்க்கும் உயர்கல்வி என அனைத்து அம்சங்களும் தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ளன’ என கூறினார்.
தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசுகையில், “படித்த வேலையில்லாத இளைஞர்கள், தவறான வழிகளில் செல்கின்றனர். இதை தடுக்க வேலை வாய்ப்பை பெற்றுத் தரும் பாடங்களை கல்வி நிறுவனங்கள் கற்றுத்தர வேண்டும் என்ற நோக்கில், சுப்புலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியை துவங்கினேன். இதையே தற்போதைய தேசிய கல்விக் கொள்கையும் வலியுறுத்துகிறது. திறமையான மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற அரசின் கனவை கல்வி நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டும்,” என தெரிவித்தார்.
டில்லி ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்., தலைவர் கனகசபாபதி,”1830ல் 75 சதவீதம் கல்வியறிவை நாம் பெற்றிருந்தோம். ஆங்கிலேயர் வருகை, மெக்காலே கல்வியால் நம்மிடம் இருந்த வலுவான கல்வி முறை சிதைக்கப்பட்டது.’ தற்போதுள்ள குறைபாடுகளை நீக்கி, நாம் இழந்த கல்வி முறையை மீட்டெடுக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை உள்ளது,” என்றார். பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் செல்வம், “தரமான கல்வியே நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்தையும் நிர்ணயிக்கிறது. தரமான ஆசிரியர் சமுதாயம் உருவாக வேண்டும். இதை நிறைவேற்றுவதாகவே தேசிய கல்விக் கொள்கை உள்ளது,” என பேசினார். இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென்பாரத தலைவர் வன்னியராஜன், பேராசிரியர் பெருமக்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.