உதகை ராஜ்பவனில் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பல்கலைக் கழக மானியக் குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதீஷ் குமார் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘நாட்டில் 1,050 பல்கலைக் கழகங்கள் உள்ளன. அவற்றில் தனியார் பல்கலைக் கழகங்கள் 400. நாட்டில் 43 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் கிராமப்புறங்களில் உள்ள 45 சதவீத கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் தரமான கிடைக்க வேண்டும். அதன் மூலமாகவே மாணவர்களின் வாழ்வு மாற்றமடையும். நூறாண்டுகளுக்கு முன்னர் இருந்த கல்வி நிலை, தற்போது மாறியுள்ளது. தொழில்நுட்பப் புரட்சியால் பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் பல புதிய மாற்றம் ஏற்படும். அதற்கு நாம் தயாராக வேண்டும். சவால்களை எதிர்கொள்ள கல்வி அமைப்பை மாற்றியமைக்க வேண்டும். மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க ஆசிரியர்கள் தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். கல்வியை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும். வேலை வாய்ப்புகள் கிடைக்க திறனை மேம்படுத்த வேண்டும். ஒரே ஒரு பட்டப்படிப்பு மட்டுமின்றி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டப் படிப்புகளை ஆன்லைன், டிஜிட்டல் தளத்தில் மேற்கொள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டும். மாணவர்களை சிந்தனையாளர்களாக மாற்ற, புதிய தேசிய கல்விக் கொள்கையில் பல அம்சங்கள் உள்ளன. தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த பல்கலைக் கழகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பேசினார்.