பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் சமீபத்தில் காலமானார். இதனையடுத்து டெல்லியில் இருந்து குஜராத் சென்ற பிரதமர் மோடி, வட்நகரில் தாயாரின் இறுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு உடனடியாக பணிக்கு திரும்பினார். மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் வந்தே பாரத் ரயிலை காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டார். பெற்ற தாய் இறந்த நிலையிலும், உடனடியாக பிரதமர் பணிக்கு திரும்பியது உலகையே ஆச்சரியப்பட வைத்தது. இந்நிலையில், பிரதமர் மோடியின் தந்தை தாமோதர்தாஸ் மூல்சந்த் மோடி கடந்த 1989ல் காலமானபோது பிரதமர் மோடியின் அன்றைய செயல்பாடு குறித்து வி.ஹெச்.பி பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி கூறுகையில், “குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 1998ல் பா.ஜ.கவின் முக்கிய கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான் மோடியின் தந்தை இறந்துவிட்டார் என்ற தகவல் எங்களுக்கு வந்தது. மோடி உடனடியாக கிளம்பி வட்நகர் சென்றார். அதன்பிறகு அவர் கட்சி கூட்டத்துக்கு வரும் சூழ்நிலை இல்லாத காரணத்தால் அவர் வரமாட்டார் என்று நாங்கள் அனைவரும் நினைத்திருந்தோம். ஆனால், தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு, பிற்பகல் கட்சி கூட்டத்துக்கு மோடி வந்துவிட்டார். அவரைப் பார்த்து கூட்டத்தில் இருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டோம். கட்சி கூட்டம் முடிந்த பிறகு தந்தை இறந்த சூழ்நிலையிலும் கூட்டத்துக்கு வந்ததுகுறித்து மோடியிடம் கேட்டபோது அவர், ‘தந்தையின் இறுதிச் சடங்கை செய்ய வேண்டியது என் கடமை. அதேபோல, கட்சியில் எனது பொறுப்புகளை முழுமையாக செய்ய வேண்டியதும் என்கடமை’ என்றார். அவர் சொன்ன வார்த்தைகள் எங்கள் அனவருக்கும் ஊக்கமளிக்கும் விதமாக இருந்தது. நமது பொறுப்புகள், கடமைகளை செய்வதற்கு அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்தோம்” என திலீப் திரிவேதி நினைவுகூர்ந்தார்.