தேசப்பாதுகாப்பு மத்திய அரசின் மிக உயர்ந்த முன்னுரிமை: என்றும் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஜம்முவில், 2023 ஜூன் 26 அன்று நடைபெற்ற ‘தேசப்பாதுகாப்பு மாநாட்டில்’ உரையாற்றிய அவர், கடந்த 9 ஆண்டுகளில், நாட்டின் பாதுகாப்பில் மிகப் பெரிய மாற்றத்தை இந்தியா கண்டுள்ளது என்றார். 2013-14-ல் இந்தியா பற்றி கருத்து பலவீனமான தேசம் என்பதாக இருந்தது என்றும் இது பிரச்னைகளை உருவாக்கியது என்றும் குறிப்பிட்ட அவர், தற்போது எந்தவித அச்சுறுத்தலையும் முறியடிக்கும் திறனை நாடு பெற்றுள்ளது என்றார்.
நீண்டகாலமாக எல்லை கடந்த பயங்கரவாதத்தின் மூலம் நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. ஆனால், நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது பயங்கரவாதத்திற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. உரி, புல்வாமா சம்பவங்களை தொடர்ந்து பயங்வாதிகளை ஒழிப்பதற்கான துணிச்சலான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் சகிப்பின்மை நிரூபிக்கப்பட்டதோடு ராணுவத்தின் இணையற்ற வீரமும், நிரூபணமானது. தற்போது ஏராளமான நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளன என்று திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பயங்கரவாத பிரச்னையில் உலகின் மனநிலையை இந்தியா எவ்வாறு மாற்றியுள்ளது என்பதை அமெரிக்க அதிபர் திரு ஜோ பைடனை, பிரதமர் திரு மோடி, சந்தித்தப்பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை வெளிப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
ராணுவத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதங்களை சார்ந்திருப்பதை இந்தியா விரும்பவில்லை என்றும் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பாக மாறுவது மட்டுமே தேசப்பாதுகாப்பை வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது டாங்குகள், போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பலவகையான ஆயுதங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. 2014-ம் ஆண்டுக்கு முன்பு ரூ.9,000 கோடியாக இருந்த பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி, தற்போது ரூ.16,000 கோடியைக் கடந்துள்ளது என்றும் விரைவில், இந்த அளவு ரூ.20,000 கோடியை எட்டும் என்றும் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.