பாரதத்தின் தேசிய நாட்காட்டி

பாரதத்தின் தேசிய நாட்காட்டி குறித்த இரண்டு நாள் மாநாடு மற்றும் கண்காட்சி ஏப்ரல் 22, 23 தேதிகளில், மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், மத்தியப் பிரதேச அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில், புவி அறிவியல் அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து விஞ்ஞான பாரதி இந்த இரண்டு நாள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. அசாமில் இந்த மாநாட்டை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏப்ரல் 6ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாரத தேசிய நாட்காட்டி குறித்து இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். அசாம் அரசின் அமைச்சர் கேசப் மஹந்தா இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். விஞ்ஞான பாரதியின் தேசிய அமைப்புச் செயலாளர் ஜெயந்த் சஹஸ்ரபுதே தொடக்கவுரையாற்றினார். இதில், பலதுறை அறிஞர்கள், வல்லுனர்கள், விஞ்ஞானிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ‘பாரத தேசிய நாட்காட்டி’, இது பாரதத்தின் அடையாளத்தின் அறிவியல் வெளிப்பாடு. பாரத தேசிய நாட்காட்டி’ 1957ல் நமது நாடாளுமன்றத்தால் அரசியலமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது சுதந்திரம் பெற்றவுடன் நமது அடையாளத்தை மீட்டெடுப்பதற்கான வெளிப்படையான சமிக்ஞையாகும். இருப்பினும், அது மக்களால் அதிகம் கவனிக்கப்படாமல் உள்ளது வருந்தத்தக்கது.