பாரத் மண்டபத்தில் நடராஜர் சிலை பிரதமர் பெருமிதம்

ஜி 20 உச்சி மாநாடு, புது டில்லியில், 9, 10ம் தேதிகளில் நடக்க உள்ளது.இதையொட்டி, மாநாடு நடக்கும் பிரகதி மைதானில் உள்ள பாரத் மண்டபம் நுழைவு வாயிலில், தமிழகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள பிரமாண்ட நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, இந்திரா காந்தி தேசிய கலை மையம், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த நடராஜர் சிலை, 27 அடி உயரம், 18 ஆயிரம் கிலோ எடையுடன், அஷ்டதாதுக்கள் எனப்படும் எட்டு வேதிப்பொருள்களால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப் பெரும் சிலையாகும். தமிழகத்தின் சுவாமி மலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஸ்தபதி மற்றும் அவரது குழுவினர் இதை, ஏழு மாதங்களுக்குள் உருவாக்கியுள்ளனர். சோழர்கள் காலத்தில் இருந்து, இவரது குடும்பத்தைச் சேர்ந்த, 37 தலைமுறையினர், சிலைகள் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர். அண்டத்தின் ஆற்றல், புதுமை, சக்தி ஆகியவற்றின் அடையாளமாக விளங்கும் இந்த சிலை, ஜி – 20 மாநாட்டின் முக்கிய ஈர்ப்பு விசையாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பதிவை இணைத்து, பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:பாரத் மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாசாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது. ஜி – 20 உச்சி மாநாட்டுக்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.