சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் காணொளிக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திலிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற சகோதர சகோதரிகளை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழில் வரவேற்றார். “ஒரே பாரதம் உன்னத பாரதம் எனும் சிந்தனையை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது தமிழக மக்கள், சௌராஷ்டிர மக்களை வரவேற்று செயல்படுத்தினர். பல ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத் மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் சௌராஷ்டிரா மக்கள் பரவலாக வாழ்கின்றனர். நமது நாடு பன்முகத்தன்மை கொண்டது என்றும், வெவ்வேறு மொழிகளை பேசும் மக்கள் வாழும் சிறப்பு வாய்ந்த நாடு. மிகவும் கடினமான சூழ்நிலைகளில் கூட புதுமைகளை உருவாக்கும் சக்தி பாரதத்துக்கு உள்ளது. செளராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் போன்ற நிகழ்வுகள், தேசத்தின் ஒற்றுமைக்கு வழிவகுப்பதோடு ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற இலக்கை நோக்கி பயணிக்க உத்வேகம் அளிக்கும். இந்த சிந்தனையை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது தமிழக மக்கள், சௌராஷ்டிர மக்களை வரவேற்று செயல்படுத்தினர்” எனத் தெரிவித்த பிரதமர் மோடி, விருந்தோம்பலை வலியுறுத்தும், ‘அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார். தமிழகம் மற்றும் குஜராத் இரண்டு மாநிலங்களும் எவ்வாறு ஆன்மீகத்தில் ஒருங்கிணைந்துள்ளது என்பதையும், இந்தச் சங்கமம் நிகழ்வு, சர்தார் வல்லபாய் படேல் மற்றும் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் “தேசமே முதன்மை” எனும் சிந்தனையின் வெளிப்பாடாகும் என்பதையும் குறிப்பிட்டார்.
சர்தார் படேலைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, அமிர்த காலத்தின்போது நாட்டின் ஒருமைப்பாட்டைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து அவர் ஆசீர்வாதங்களைப் பொழிவார். இந்நிகழ்ச்சியில் சோமநாத்தும் ராமேஸ்வரமும், துவாரகையும் மதுரையும், நர்மதையும் வைகையும், தண்டியாவும் கோலாட்டமும் ஒன்றாகக் இணைக்கப்பட்டுள்ளன. 11ம் நூற்றாண்டில் குஜராத்தின் மீது கஜினி முகமது தொடுத்த தொடர்ச்சியான தாக்குதல்களால் இந்தச் சமூகம் இடம்பெயர்ந்தது. அவர்கள் பெரும்பாலும் பட்டு வியாபாரிகள் மற்றும் நெசவாளர்களாக இருந்தனர். திருமலை நாயக்கர் போன்ற உள்ளூர் ஆட்சியாளர்களின் அனுசரணையின் காரணமாக தமிழகத்தில் தங்கினர். சௌராஷ்டிர தமிழ் சங்கம நிகழ்வு சில ஆயிரம் பேர் அவர்களின் பாரம்பரியத்தை மீண்டும் கண்டறிய தங்கள் வேர் நிலத்திற்கு வருவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. குஜராத்தி போன்ற சொற்களைக் கொண்ட சௌராஷ்டிரா மொழிக்கு எழுத்துமுறை உள்ளது. ஆனால் அதன் பயன்பாடு குறைந்துவிட்டது எனத் தெரிவித்தார். மேலும், தமிழ் பின்னணிப் பாடகரான டி.எம். சௌந்தரராஜன், ‘மதுரை காந்தி’ என்று அறியப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் என்.எம்.ஆர். சுப்பராமன் போன்ற புகழ்பெற்ற சௌராஷ்டிரத் தமிழர்களில் சிலரை நினைவுகூர்ந்தார். இந்நிகழ்வில் ஸ்ரீ சோம்நாத் சமஸ்கிருத பல்கலைக் கழகத்தின் ‘சௌராஷ்ட்ர தமிழ் சங்கமம் பிரஷாஸ்தி’ என்ற சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா மலரை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.