ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள நதிமார்க் கிராமத்தில் மார்ச் 23, 2003 அன்று, 24 ஹிந்து காஷ்மீரி பண்டிட்டுகள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் போலி ராணுவ சீருடை அணிந்து வந்து ஹிந்துக்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியே இழுத்து வரிசையாக நிறுத்திவைத்து சுட்டுக் கொன்றனர். பலியானவர்கள், 11 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 2 சிறு குழந்தைகள் அடங்குவர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அங்கிருந்து தப்பியோடினர். கொலையாளிகள் பலியானவர்களின் உடல்களை சிதைத்து, அவர்களது வீடுகளை சூறையாடி, இறந்த பெண்களின் உடல்களில் இருந்து நகைகளை எடுத்துச் சென்றனர். இந்த படுகொலைக்கு மூளையாக செயல்பட்டவன் பயங்கரவாதி ஜியா முஸ்தபா. இந்த நதிமார்க் படுகொலை வழக்கை ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் 10 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் விசாரணை செய்யவுள்ளது. முந்தைய இந்த வழக்கு விசாரணையின்போது சாட்சிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறிவிட்டிருந்தனர். அச்சுறுத்தல் காரணமாக ஷோபியானில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகத் தயங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.