ராமாயண போட்டியில் வென்ற முஸ்லிம்கள்

கேரளாவில் வல்லன்சேரியில் உள்ள இஸ்லாமிய கலைக் கல்லூரியில் முகமத் ஜபிர், முகமத் பசித் என்ற முஸ்லிம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். டிசி புத்தகம் சார்பாக ஆன்லைனில் நடந்த ராமாயணம் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற ஐவரில் ஜபிரும், பசித்தும் இடம்பெற்றுள்ளனர். ராமாயணம் வினாடி வினா போட்டியில் முஸ்லிம் மாணவர்கள் இருவர் வெற்றி பெற்றிருப்பது அவர்களது குடும்பதினர் உட்பட அனைவரையும் மகிழ்ச்சியடைச் செய்துள்ளது. இதுகுறித்து பேசிய பசித், “நாங்கள் போட்டியில் தன்னம்பிக்கையுடன் இருந்தோம். ஏனெனில் எங்கள் கல்லூரி பாடப்பிரிவில் ராமாயணமும் இருந்தது. நாங்கள் பாரதத்தின் முக்கிய மதங்களான ஹிந்து மதம், புத்த மதம், சிக்கிய மதம், ஜெயின் மதங்களை பற்றியும் கிறிஸ்துவம், யூத மதம் குறித்தும் படித்துள்ளோம். பாரதத்தில் உள்ள அனைவரும் நம் நாட்டின் மிகப்பெரிய இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தை கட்டாயம் படிக்க வேண்டும். மற்ற மதங்களின் மீதான மரியாதையை அதிகரிக்க வாசிப்பு நிச்சயம் உதவும்” என்றார். ஜபிர் கூறுகையில், “அனைத்து மதங்களும் அமைதியையே வலியுறுத்துகின்றன. ராமாயணம் சகிப்புத்தன்மை, பொறுமை, அமைதி, சகோதர அன்பு மற்றும் பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறது” என்றார்.