மத்திய அரசு சமீபத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளை ஐந்தாண்டு காலத்திற்கு தடை செய்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள பல முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
அகில இந்திய சூஃபி சஜ்ஜதனாஷின் கவுன்சில்களின் தலைவர் சையத் நசீருதீன் பி.எப்.ஐ மீதான தடையை அந்த அமைப்பின் சார்பாக வரவேற்றார். அந்த அமைப்பின் அறிக்கையில், “சட்டத்தை கடைபிடிக்கவும் பயங்கரவாதத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இந்த தடைக்கு அனைவரும் ஆதரவு காட்ட வேண்டும். அரசும் புலனாய்வு அமைப்புகளும் எடுத்துள்ள இந்த முடிவை வரவேற்க வேண்டும். நாடு பாதுகாப்பாக இருந்தால்தான் நாம் பாதுகாப்பாக இருப்போம். எந்தவொரு அமைப்பு அல்லது சித்தாந்தத்தையும் விட தேசம் பெரியது. நாட்டைப் பிளவுபடுத்துவது, ஒற்றுமையைக் குலைப்பது, அமைதியைக் குலைப்பது என்று யாராவது பேசினால், அந்த நபரை நாட்டில் வாழ அனுமதிக்கக் கூடாது. அனைத்திந்திய சூஃபி சஜ்ஜதனாஷின் கவுன்சில் அந்த நாட்டின் ஒற்றுமை, அமைதி மற்றும் இறையாண்மைக்கு உறுதிபூண்டுள்ளது. நாட்டிற்கு எதிரானவர்களுக்கு எதிராக எங்கள் அமைப்பு குரல் எழுப்பும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய முஸ்லீம் மாணவர் அமைப்பு, “பி.எப்.ஐ மீதான தடை நியாயமானது. இந்திய இளைஞர்கள், பயங்கரவாத சித்தாந்தத்தை விட்டு வெளியேறி இஸ்லாத்தின் உண்மையான அர்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று அதன் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேபோல, பரேல்வி முஸ்லிம் அமைப்பின் சார்பில், “மோடி அரசாங்கத்தின் பி.எப்.ஐ மீதான தடையை பரேல்வி முஸ்லிம்கள் ஆதரிக்கின்றனர்” என்று மௌலானா ஷஹாபுதீன் ரிஸ்வி கூறியுள்ளார்.
சூஃபி இஸ்லாமிய வாரியத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் காஷிஷ் வார்சி பி.எப்.ஐமீதான தடையை ஆதரித்துள்ளார். அகில இந்திய பாஸ்மாண்டா முஸ்லிம் மகாஜ் அமைப்பும் பி.எப்.ஐ அமைப்பை தடை செய்ததற்காக மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
கேரள சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.முனீர், தனது கட்சியின் சார்பில் இந்த முடிவை வரவேற்று, “நியாயமாக இருந்தால் பி.எப்.ஐ தடையை வரவேற்கிறோம். தடை அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியாது. முன்னதாக சிமி (இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம்) தடைசெய்யப்பட்டது, ஆனால் என்.டி.எப் (தேசிய வளர்ச்சி முன்னணி), மற்றும் பி.எப்.ஐ ஆகியவை தோன்றின. அரசு இதை கவனத்தில்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இதேபோல நாடு முழுவதும் உள்ள பல தேசியவாத எண்ணம்கொண்ட அரசியல் தலைவர்கள் இந்தத் தடையை வரவேற்றுள்ளனர்.