கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை எழுந்தபோது முஸ்கான் என்ற மாணவி ஹிஜாப் அணிந்து கல்லூரி சென்றார், அல்லாஹு அக்பர் என கோஷமிட்டு ஹிஜாப் எங்கள் உரிமை என்றும் பேசினார். இதனால் ஏதோ சாதித்த பெரிய வீராங்கனைபோல அவர் சித்தரிக்கப்பட்டார். இஸ்லாமிய அமைப்புகள் முஸ்கானை வெகுவாக பாராட்டின. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், உலக நாடுகளால் தேடப்படும் முக்கிய குற்றவாளியான அல்கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி மாணவி முஸ்கானைப் பாராட்டி வீடியோ வெளியிட்டார். இந்த பயங்கரவாதியின் பாராட்டுக்கு மாணவியின் தந்தை முகமது ஹுசைன் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நேற்று பிற்பகலில் தான் இந்த விவகாரம் எனக்கு தெரியவந்தது. ஜவாஹிரி யார் என்றுக் கூட எனக்குத் தெரியாது. அவர் என் மகள் பெயரை பயன்படுத்தியது மிகத்தவறு. எங்களது தாய் நாடான பாரதத்தில் நாங்கள் மகிழ்ச்சியாகவே உள்ளோம். எங்கள் நாட்டின் பிரச்சனைகளைப் பற்றி அல்கொய்தா பேச வேண்டிய தேவையில்லை. இதுபோன்றவர்கள் தான் எங்களது அமைதியை கெடுக்கிறார்கள். ஒற்றுமையின்மையை உருவாக்குகிறார்கள். மாண்டியாவில் பிறந்த நாங்கள் இங்கு சகோதரர்களை போலவே வாழ்ந்து வருகிறோம். சில சம்பவங்கள் நடந்திருக்க கூடாது. இப்போது எங்களால் அமைதியான வாழ்க்கையை வாழ முடியவில்லை. எங்களின் அமைதியின்மைக்கு என்ன காரணம் என்பதை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். ஹிஜாப் அணிந்து சென்றதற்காக எனது மகளை கல்லூரி நிர்வாகம் தேர்வெழுத அனுமதிக்கவில்லை. முஸ்கான் அடுத்த வருடம் தனது படிப்பை தொடருவார். எங்கு ஹிஜாப் அனுமதிக்கப்படுகிறதோ அங்கு அவரை சேர்த்து நான் படிக்க வைப்பேன். ஜவாஹிரி வீடியோ விஷயத்தை கேள்விப்பட்டு என் மகள் கலக்கமடைந்தாள்’ என தெரிவித்தார்.