பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் சுமார் 15,000 சீக்கியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். பெஷாவர் நகரின் படாலால் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த சுல்ஜித் சிங் மற்றும் ரஞ்சித் சிங் ஆகிய இருவரும் தங்கள் கடைகளில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு அவர்களை கொலை செய்தனர். இதற்கு உலகெங்கிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பெஷாவர் நகரில் 2 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது தொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளோம். படுகொலை குறித்து நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும். கொலையாளிகளை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இது போன்ற நிகழ்வுகள் பாகிஸ்தானில் தொடர்ந்து நடைபெறுகின்றன” என தெரிவித்துள்ளார்.