சர்வதேச புகழ் பெற்ற பாரா நீச்சல்வீரர் கர்நாடகாவை சேர்ந்த கே.எஸ்.விஸ்வாஸ். இவர் நீச்சலில் மட்டுமின்றி டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தவர். விஸ்வாஸ் ஒரு பயிற்சி பெற்ற நடனக் கலைஞரும் கூட. தனது 10 வயதில் உயரழுத்த மின்சாரக் கம்பி விழுந்த விபத்தில் இவர் தனது இரு கைகளையும் இழந்தார். இவரை அந்த விபத்தில் இருந்து காப்பாற்றிய இவரது தந்தை அதனால் உயிரிழந்தார். விஸ்வாஸ் தனது தாயை ஒரு முன்மாதிரியாகக் கருதினார், எப்போதும் அவரிடமிருந்து உத்வேகத்தைப் பெற்றார். அவரது தாயார் கடந்த 2009ல் காலமானார். எனினும், பல வருட கடுமையான பயிற்சி மற்றும் தளராத நம்பிக்கை காரணமாக விஸ்வாஸ் ஒரு சிறந்த நீச்சல் வீரரானார். இதனால், 15 திரைப்படங்களுக்கு மேல் இயக்கிய கன்னட திரைப்பட இயக்குனர் ராஜ்குமாரின் கவனத்தில் விழுந்தார் விஸ்வாஸ். வாழ்க்கையில் சாதிக்க நினைக்கும் மற்றும் சாதிக்கத் தவறிய பலருக்கும் விஸ்வாஸின் திறமையும், ‘எப்போதும் கைவிடாதே’ என்ற மனப்பான்மை உத்வேகமாக அமையும் என்ற நோக்கில் ராஜ்குமார் தற்போது அவரது கதையை ‘அரபி’ என்ற திரைப்படமாக்கியுள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் கர்நாடகா சிங்கம் என புகழப்படும் முன்னாள் காவல்துரை அதிகாரியும் தற்போதைய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தான் நடிக்க வெறும் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்துள்ளார் அண்ணாமலை. நீச்சல் வீரருக்கு பயிற்சியாளராக அண்ணாமலை நடித்துள்ளார். இந்த படத்தில் அண்ணாமலையின் செயல்பாடுகள் பாஜ.க அல்லாத கட்சியினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிப்படுகிறது.