எம்.பிக்களின் மோட்டார் சைக்கிள் பேரணி

சுதந்திரத்தின் 75வது ஆண்டுப்பெருவிழா செய்தியையும், தேசியக் கொடியுடனான உணர்வுபூர்வ  இணைப்பையும் மக்களிடம் கொண்டுசெல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இதர தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். செங்கோட்டையில் இருந்து விஜய் சதுக்கத்திற்கு ‘வீடுகள்தோறும் மூவர்ணக்கொடி’ என்பதற்கான மோட்டார் சைக்கிள் பேரணியை குடியரசு துணைத்தலைவர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். தேசியக் கொடிக்கும், பாரதக் குடிமக்களுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் முன்முயற்சியான வீடுகள் தோறும் மூவண்ணக்கொடி என்பது குறித்து விழிப்புணர்வை அதிகப்படுத்த கலாச்சார அமைச்சகத்தால் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை பாராட்டிய வெங்கையா நாயுடு, “சுதந்திர தின கொண்டாட்டம் என்பது காலனி ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நமது விடுதலைப் போராட்ட வீரர்களின் எண்ணற்ற தியாகங்களை நமக்கு நினைவூட்டுவதாக இருக்க வேண்டும். விடுதலைப் போராட்டத்தில் இருந்து வீரம் மற்றும் சமூக நல்லிணக்கத்தின் தகவல்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும். நமது தேசிய கொடியை நாம் பெருமிதத்துடன் ஏற்றுவது, நமது தேசத்தின் மாண்புகள், நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை நிலைநிறுத்தி பிரதிபலிப்பதாகும்” என்று தெரிவித்தார். மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பிரஹலாத் ஜோஷி, கிஷன் ரெட்டி, ஸ்மிருதி இரானி, அனுராக் தாக்கூர், அர்ஜுன் ராம் மெக்வால், மீனாட்சி லெக்கி, வி. முரளீதரன் மற்றும் ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.