இரு சக்கர வாகன பந்தயத்தின் உச்சமாக விளங்கும் ‘மோட்டோ ஜிபி’ (MotoGP) திட்டமிட்டபடி அனைத்து விஷயங்களும் நடந்தால், 2023 குளிர்காலத்தில் பாரதத்தில் நடக்கலாம். இது நாட்டில் தேக்கமடைந்துள்ள மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ ஜிபி வணிக உரிமைகள் உரிமையாளர் டோர்னா மற்றும் நொய்டா சார்ந்த ரேஸ் விளம்பரதாரர்கள் ஃபேர்ஸ்டிரீட் ஸ்போர்ட்ஸ் இடையேயான முதன்மை ஒப்பந்தம் அடுத்த வார தொடக்கத்தில் கையெழுத்திடப்படலாம். மேலும் இதன் தலைவர்கள், டெல்லியில் ‘கிராண்ட் பிரிக்ஸ் ஆஃப் பாரத்’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் ஃபார்முலா ஒன் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸின் தாயகமாக இருந்த புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் இந்தச் சுற்று நடத்தப்பட வாய்ப்புள்ளது, இது முன்பு, நிதி, வரி மற்றும் அதிகாரத்துவ தடைகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து பேசிய ஃபேர்ஸ்ட்ரீட் ஸ்போர்ட்ஸ் சி.ஓ.ஓ புஷ்கர் நாத், “ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஃபார்முலா 1ல் என்ன தவறு ஏற்பட்டது என்பதைக் கருத்தில் கொண்டு, அவற்றை சரி செய்வதற்காகவும் பாரதத்தில் நடக்கவ்வுள்ள இந்த உயர்மட்ட பந்தயத்தை ஒழுங்கமைப்பதற்காகவும் நாங்கள் முன் தயாரிப்புகளைச் செய்துள்ளோம். உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன சந்தையாக பாரதம் உள்ளது. நம் அனைவருக்குமே இருசக்கர வாகனங்களுடன் ஏதோ ஒருவகையில் தொடர்பு உள்ளது. மோட்டோஜிபி மிகவும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும். இதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். நீண்ட காலத்திற்கு பாரதத்தில் இந்த பந்தயங்கள் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம். அடுத்த ஆண்டு பாரதத்தில் குளிர்கால போட்டி நடக்கும் என எதிர்பார்க்கிறோம். இதற்கான ரேஸ் டிராக்கை தயார் செய்வது மட்டும் அல்ல, பந்தயத்திற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இது கிட்டத்தட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது போன்றது. ஐரோப்பா மற்றும் உலகின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் இதனை காண வருவார்கள். 200 நாடுகளில் இந்த போட்டி நேரடியாகக் காண்பிக்கப்படும் இந்த பந்தயம் உத்தரப் பிரதேசத்தை உலக வரைபடத்தில் இடம்பெற வைப்பது மட்டுமல்லாமல் இங்கு சுற்றுலாவை மேம்படுத்தும். அரசின் ஆதரவின்றி பந்தயம் நட்த்துவது சாத்தியமில்லை. அவ்வகையில் இந்த நிகழ்வை பாரதத்திற்கு கொண்டுவர உதவியதற்காக மத்திய மாநில அரசுகள் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜ.க அரசு உண்மையிலேயே எங்களுக்கு உதவிகரமாக உள்ளது” என கூறினார்.