பகவான் ஸ்ரீராமர் பிறந்த புனித இடமான அயோத்தியில் உச்சநீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பால் தற்போது பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அயோத்தியில் உள்ள தனிபூர் கிராமத்தில் மசூதி கட்டுவதற்கு, ஐந்து ஏக்கர் நிலத்தை உ.பி. அரசு ஒதுக்கியது. அங்கு ஒரு மசூதியும் மருத்துவமனையும் அமைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. சுன்னி வக்ஃப் வாரியம் அமைத்த இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை (ஐ.ஐ.சி.எஃப்) இதற்கான வரைபடத்தை வெளியிட்டது. அங்கு அமையவுள்ள மசூதிக்கு, பாபரின் பெயரை சூட்ட பெயர் வைக்க வேண்டாம் என்று ஐ.ஐ.சி.எஃப் அறக்கட்டளை முடிவெடுத்தது. அதனால், 1857ல் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய அஹ்மதுல்லா ஷா பைசாபாடியின் பெயர் சூட்டப்படுகிறது. ஒரே நேரத்தில் சுமார் 2,000 பேருக்கு இடமளிக்கும் வகையில் இந்த மசூதி கட்டப்படுகிறது. மேலும், இத்திட்டத்தின் கீழ், 300 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஒரு சமூக சமையலறை, ஒரு ஆராய்ச்சி மையமும் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.