ஐ.நா தூதரக தளபதியான மோகன்

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட்டாக லெப்டினென்ட் ஜெனரல் மோகன் பணியாற்றி வருகிறார். இவர், வடகிழக்கு ஆப்பிரிக்காவில், தென் சூடான் நாட்டிற்கான ஐ.நா தூதரகத்தின் படை தளபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘அயராத அர்ப்பணிப்பு, திறமையான தலைமை பண்பு, விலைமதிப்பற்ற சேவை ஆகியவற்றின் அடிப்படையில் மோகன் தென் சூடான் நாட்டின் தூதரக படைத்தளபதியாக தேர்வு செய்யப்பட்டதாக ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அறிவித்தார். இந்நிலையில், இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மோகன், “ஐ.நாவில் அமைதி காத்தல் என்பது முக்கிய அங்கம். ஐ.நாவில் உலக அளவில் அதிக பங்களிப்பு அளிக்கும் நாடுகளில் நமது நாடும் ஒன்று. மற்ற நாடுகளின் அமைதிப் பணிக்காக சென்ற நமது படையினரில் இதுவரை 160 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமைதிக்காக இவ்வளவு வீரர்கள் உயிரிழந்தது வேறு எந்த நாட்டிலும் கிடையாது. அமைதிக்காக நம் நாடு மேற்கொள்ளும் முக்கிய பங்களிப்பில் எனக்கும் ஒரு சிறிய பங்கு கிடைத்தது பெருமை அளிக்கிறது. கடவுளுக்கும், அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.