கர்நாடகாவில் நடந்த தவறுகள் இனி நடக்க கூடாது என மோடி எச்சரிக்கை

லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள், தேர்தல் பணிகளை முழுவீச்சில் துவங்கியுள்ளன. இந்நிலையில் புதுடில்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், இணை அமைப்பு பொதுச்செயலர் சிவ் பிரகாஷ், தேசிய பொதுச்செயலர்கள் சுனில் பன்சால், அருண் சிங் உள்ளிட்டோருடன் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். இரவு 10:00 மணியளவில் துவங்கிய இந்த கூட்டம், அதிகாலை 3:30 மணி வரை நீடித்து உள்ளது.

எடுத்த எடுப்பிலேயே பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் பற்றி மோடி விசாரித்துள்ளார். இதையடுத்து அவர் கூட்டத்தில் பேசியது குறித்து பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது: தேசிய அளவில் கூட்டணி அமைப்பது எதிர்க்கட்சிகளுக்கு சாத்தியப்படாது. அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளின் வியூகத்தை வீழ்த்த, ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியும் முக்கியம் என்ற எண்ணத்துடன் திட்டமிட வேண்டும். 10 ஆண்டுகளாக அதிகாரம் இல்லாததால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் நெருங்க நெருங்க ஊடகங்கள், பெரும் தொழிலதிபர்கள் என அரசியலுக்கு வெளியில் இருந்தும், நாம் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இவை அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளின் ஊழல், வாரிசு அரசியல் பற்றி மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும். கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்காவிட்டாலும் 90 இடங்களுக்கு குறையாமல் வெற்றி கிடைக்கும் என அனைவரும் கூறினீர்கள். இதற்காக கடும் எதிர்ப்புகளையும் மீறி பல முடிவுகளை எடுத்தீர்கள். ஆனால், 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. கர்நாடகாவில் நடந்த தவறுகள், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா சட்டசபை தேர்தலில் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மோடி கண்டிப்புடன் கூறினார்.

அடுத்து, மத்திய அமைச்சர்கள் சிலரை கட்சி பணிக்கு, குறிப்பாக மாநிலங்களில் தேர்தல் பொறுப்பாளராக நியமிப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. கவர்னர்களாக இருக்கும் சிலர், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களை மீண்டும் கட்சி பணிக்கு கொண்டு வரலாமா; சில மூத்த தலைவர்களை கவர்னர்களாக நியமிக்கலாமா என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தால் அரசியல் ரீதியாக என்ன தாக்கம் ஏற்படும்; குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்தது போல போராட்டங்கள் நடக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.