பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி வாயிலாக இரு தினங்களுக்கு முன் உரையாடினார். அப்போது, பிரச்சினைக்கு போர் மூலம் தீர்வு காண முடியாது, பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காண முடியும், உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண பாரதம் பங்காற்ற தயாராக இருக்கிறது என்று பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க செய்தித் தொடர்பாளர் கரின் ஜீன் பெர்ரி, “உலக நாடுகள் வெளிப்படையாக பேச வேண்டும், தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை இருக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறோம். அதன் காரணமாகவே பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபரிடம் பேசியிருக்கிறார் என நினைக்கிறேன். ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தபோது போர் குறித்து பிரதமர் மோடி கூறியது மிகச் சரியானது. இது போருக்கான நேரம் இல்லை என மோடி, புதினிடம் நேரடியாகக் கூறினார். சர்வதேச சமூகத்திடம் இருந்து புதின் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார். அணு ஆயுத அச்சுறுத்தலைப் பொறுத்தவரை நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ரஷ்யா அணு ஆயுத யுத்தத்திற்கு தயாராகிவிட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. உக்ரைன் தனது இறையாண்மையைப் பாதுகாக்க போராடி வருகிறது. உக்ரைனின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாங்கள் அதனை ஆதரிக்கிறோம்” என்று தெரிவித்தார்.