கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் நிகழ்ச்சி பெங்களூருவை அடுத்துள்ள தேவனஹள்ளியில் நடைபெற இருந்தது. திடீர் மழை காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அங்கு சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் கட் அவுட்டுகள் மழையில் நனைந்து கிடந்தன. இதைப் பார்த்த ஒரு முதியவர் மோடியின் கட் அவுட்டில் இருந்த மழை நீரை தனது துண்டால் துடைத்தார். இதேபோல ஆங்காங்கே விழுந்து கிடந்த கட் அவுட்டுகளையும் துடைத்து, சரி செய்து நேராக நிற்க வைத்தார். இதைப் பார்த்த ஒரு சிலர் அந்த முதியவரிடம், ‘பா.ஜ.கவினர் இதற்கு பணம் தந்தார்களா?’ என கேட்டனர். அதற்கு அவர், ‘‘மோடி எனக்கு கடவுள் மாதிரி. அவருக்கு எனது விஸ்வாசத்தை காட்டுகிறேன். இதற்காக யாரும் எனக்கு பணம் தர வேண்டியதில்லை, தந்தாலும் வாங்க மாட்டேன்” என கூறிஸ் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த வீடியோவை ஏராளமானோர் பகிர்ந்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். மேலும், ‘‘இந்நாட்டின் தலைவர்கள் மீது மக்கள் அளவற்ற அன்பு காட்டுவதை இதற்கு முன் கண்டதில்லை. பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் அளவில்லாத பாசத்தை காட்டுகின்றனர். அவர் மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அவர் மீதான உண்மையான அன்பை பா.ஜ.க பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கர்நாடகாவில் உள்ள தேவனஹள்ளியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ அதனை உணர்த்துகிறது” என பதிவிட்டுள்ளார்.