மோடி அதிரடி; புதுடில்லி செல்ல ஸ்டாலின் முடிவு

பிரதமர் மோடி ம.பி.,யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் பிரதமர் மோடி, ‘தி.மு.க.,வுக்கு ஓட்டளித்தால், கருணாநிதியின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டும் பலன் அடைவர்.’ஊழல்கள் பிடிபட்டதால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜ.,வை எதிர்க்கின்றன. ஊழல் செய்தவர்களை விடமாட்டோம். அவர்களை சிறையில் தள்ளுவோம்’ என்றார்.

பிரதமர் மோடிக்கு பதிலடி தருவது குறித்து மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்துள்ளார். அதற்கு மூத்த அமைச்சர்கள், ‘தற்போது எந்த பதிலையும் சொல்லி மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம்’ என, அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மாநில நிர்வாகிகள், ‘டிவி’ விவாதங்களில் பங்கேற்கும் செய்தி தொடர்பாளர்களுக்கும் இதுதொடர்பாக பேசுவதற்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: வழக்கமாக, ‘தி.மு.க., வாரிசு அரசியலை செய்து வருகிறது’ என்ற குற்றச்சாட்டை தான் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி முன் வைப்பார். கருணாநிதி, ஸ்டாலினை விமர்சித்து பெரிய அளவில் பேசியதில்லை. ஆனால், அதை உடைத்தெறியும் வகையில், ‘ஊழல் செய்தவர்கள் தப்பிக்க முடியாது; சிறைக்கு செல்ல நேரிடும்’ என்று பிரதமர் மோடி பேசியது, தி.மு.க., வில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

‘லோக்சபா தேர்தலுக்கு முன்னும், பின்னும் மத்திய அரசுடன் இணைக்கமான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். ‘மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் குறித்த நிதி பெறுவது, மேகதாது அணை கட்டுவதை தடுப்பது போன்ற தமிழக நலன் சார்ந்த விஷயங்களுக்காக பிரதமர் மோடியை சந்தித்து பேசுங்கள்’ என, முதல்வர் ஸ்டாலினிடம் மூத்த அமைச்சர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து பிரதமர் மோடியை, டில்லியில் ஜூலை இரண்டாவது வாரம் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் சந்தித்து பேச அனுமதி கேட்டு கடிதம் எழுதப்பட உள்ளது என்று தெரிகிறது.