பயங்கரவாதி குடும்பத்துடன் எம்.எல்.ஏவுக்கு தொடர்பு?

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் கடந்த நவம்பர் 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதி ஷாரிக் மற்றும் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். நாசவேலையில் ஈடுபட குக்கர் குண்டை ஷாரிக் ஆட்டோவில் எடுத்து சென்றபோது அது வெடித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஷாரிக்கிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அந்த் பயங்கரவாதி அளித்த தகவலின்படி பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். தற்போது ஷாரிக் பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். இதனிடையே, மங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் ஒன்று உள்ளது. இந்த அலுவலகத்தை ஷாரிக்கின் குடும்பத்தாரிடம் இருந்து அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கிம்மனே ரத்னாகர் ரூ.10 லட்சத்துக்கு குத்தகைக்கு எடுத்து கொடுத்துள்ளார். இந்த குத்தகை காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இது தொடர்பான தகவல்களின்படி அமலாக்கத்துறையினர், நேற்று கிம்மனே ரத்னாகர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அலுவலகம் குத்தகை தொடர்பான விவரங்கள் குறித்து அதிகாரிகள் கேட்டதோடு அது தொடர்பான ஆவணங்களை சரி பார்த்தனர். காங்கிரஸ் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷாரிக் குடும்பத்தினருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கிம்மனே ரத்னாகர் மறுத்துள்ளார்.