பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் நாட்டை அவமானப்படுத்தியுள்ளார். அவர் தற்கால பாரத அரசியலின் மிர் ஜாஃபராக உள்ளார். மிர் ஜாஃபர் செய்த வேலையையே ராகுல் காந்தி செய்கிறார். மிர் ஜாஃபர், அப்போதைய கிழக்கிந்திய கம்பெனியின் உதவியைப் பெறுவதற்காக, 24 பர்கானாக்களை வழங்கினார். அதையேதான் ராகுலும் இப்போது செய்துள்ளார். பாரதத்தின் இளவரசராக வருவதற்கு வெளிநாடுகளின் உதவியை நாடியுள்ளார். நாட்டை அவமானப்படுத்தி உள்ளார். அந்நிய சக்திகள் பாரத விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இது ராகுல் மற்றும் காங்கிரஸின் சதிச் செயலாகும். நாடாளுமன்றத்தில் குறைவான நாட்களே பங்கேற்று விட்டு, என்னை யாரும் பேச அனுமதிக்கவில்லை என்று ராகுல் குற்றம்சாட்டி வருகிறார். கடந்த 2019ம் ஆண்டிலிருந்து ராகுல் காந்தி வெறும் 6 விவாதங்களில் மட்டுமே பங்கேற்றுள்ளார். அவர் நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்பதில்லை. அதேபோல், அவருக்கு எப்படி பேச வேண்டும் என்பதும் தெரியவில்லை. துரதிர்ஷ்டவசமாக தானும் ஒரு எம்.பி என்கிறார். அவர் ஜெய்ராம் ரமேஷின் உதவியுடனேயே பேசுகிறார். விவாதம் என்பது ஜனநாயகத்தின் ஆன்மா” என்று தெரிவித்துள்ளார்.