சதயவிழாவை புறக்கணித்த அமைச்சர்கள்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037வது சதயவிழா நடைபெற்றது. இந்த விழாவில் ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கலந்து கொண்டு ராஜராஜ சோழன் விருது வழங்கி உரையாற்றுவார்கள் என சதய விழா குழு சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழ்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள் நிச்சயம் பங்கேற்பார்கள் என செய்தியாளர்கள் சந்திப்பிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெற்ற சதய விழாவில் அமைச்சர்கள் இருவரும் பங்கேற்கவில்லை. செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திருச்சியிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் தஞ்சாவூரில் உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக மக்கள் தொடர்பு துறையிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. ஆனால், சிறிது நேரம் கழித்து அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படுவதாக தகவல் அளிக்கப்பட்டது. தஞ்சாவூரில் ராஜராஜ சோழனின் சதயவிழாவில் பங்கேற்காமல், கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாமிநாதனும் மகேஷ் பொய்யாமொழியும் பங்கேற்றனர். தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள் வந்தால் பதவி பறிபோகிவிடும் என்ற பயத்தில்தான் பெரியாரிசம், சமூக நீதி பற்றி பேசும் தி.மு.க அமைச்சர்கள் வரவில்லை என்று பொதுமக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.