குறவர்களை அவமானப்படுத்திய அமைச்சர்

வனவேங்கை கட்சியை சேர்ந்த இரணியன் என்பவர் தங்கள் சமுதாயம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி 8 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துள்ளார். இதே நிலை நீடித்தால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் உடனடியாக அவரது கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறி ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரனிடம் அழைத்துச் சென்றனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக காக்கவைத்தார் அமைச்சர். பின்னர், உள்ளே சென்ற இரணியன் மற்றும் அவரது சமூகத்தை சேர்ந்த 13 பேரையும் நாற்காலிகள் இருந்தும் உட்கார கூட சொல்லாமல் நீ என்ன குறவர் சமூகமா என கேட்டு நிற்க வைத்தே பேசி, அருகில் வராதே தள்ளி நில் என கூறி அவமானப்படுத்தியுள்ளார் அமைச்சர். மேலும், அவர்கள் கொண்டு வந்த சால்வையை வாங்கிகொள்ளாமல் கோரிக்கைகளை காதுகொடுத்து கேட்காமல், மனுவை சரியாக படிக்காமல் உங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்கிறேன் என்று கூட கூறாமல் விரட்டி விடாத குறையாக அனுப்பி இருக்கிறார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன். இது தீண்டாமை மட்டுமல்ல மனித நாகரீகம் அற்ற செயல் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பேசு தமிழா என்ற தனியார் யூடுப் சேனல் ஒன்றி இதுகுறித்த தகவல்களை வெளியிட்டு தனது மனக்குமுறலையும் வேதனையும் வெளிப்படுத்தியுள்ளார் இரணியன். இதனை முதல்வர் ஸ்டாலின் இதுவரை கண்டிக்கவில்லை. திருமாவளவன் உள்ளிட்ட கட்சியினரோ சூர்யா போன்ற நடிகர்களோ இதுவரி இதுகுறித்து வாய் திறக்கவில்லை. பெரும்பாலான முன்னணி ஊடகங்கள் எதுவும் இதனை பதிவு செய்யவில்லை என்பது சற்றே சிந்திக்கத்தக்கது. இதனிடையே, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை கண்டித்து மலையடிப்பட்டி வன வேங்கை கட்சியினர், ராஜபாளையத்தில் டிஜிட்டல் பேனர் வைத்தனர். மேலும், பட்டியலின மக்களுடன் இணைந்து ராஜபாளையத்தில் திரண்டு சாலைமறியலிலும் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு சாலைமறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை தடியடி நடத்தி விரட்டினர். அமைச்சரை கண்டித்தும், காவல்துறையின் அத்துமீறலை கண்டித்தும் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, சிவகங்கை, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வனவேங்கை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.