அமைச்சருக்கு சிறையில் ஆடம்பரம்

டெல்லி, திகார் சிறையில் இருந்து மற்றுமொரு புதிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. அதில், பணமோசடிப் புகாரில் கைது செய்யப்பட்டி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சரான சத்யேந்தர ஜெயின், சிறைக்குள் இருக்கும் போது அவருக்கு ஆடம்பரமான உணவுகள், புதிதாக வெட்டப்பட்ட சாலட், பழங்கள் போன்ற உணவுகள், மினரல் வாட்டர் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படுகின்றன. சத்யேந்தர ஜெயின் ஒரு வசதியான நாற்காலியில் அமர்ந்து அந்த முழு உணவையும் சாப்பிடுவதைக் காண முடிந்தது. மேலும், இந்த ஆண்டு மே 30ம் தேதி கைது செய்யப்பட்ட சத்யேந்திர ஜெயின், தற்போது 8 கிலோ வரை எடை அதிகரித்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறைக்குள் தனக்கு எந்த முன்னுரிமையும் வழங்கப்படவில்லை என்றும், முறையான உணவு, மருத்துவப் பரிசோதனை போன்ற சலுகைகள் தமக்கு கிடைக்கவில்லை என்று அவர் விசாரணை நீதிமன்றத்தில் மனு சமர்பித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த வீடியோ வெளிவந்துள்ளது. இவ்வழக்கு விசாரணையின்போது, காவலில் இருந்தபோது சத்யேந்தர ஜெயின் 28 கிலோ எடை குறைந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை, வேண்டுமென்றே முக்கியமான தகவல்களை அனுமதியின்றி ஊடகங்களுக்கு கசியவிட்டதாகவும் புகார் கூறியிருந்தார். சத்யேந்தர ஜெயினுக்கு சலுகைகள் வழங்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே திகார் சிறைக் கண்காணிப்பாளர் அஜித் குமாரை, டெல்லி தலைமைச் செயலாளர் சஸ்பெண்ட் செய்திருந்தார். மேலும், அவருக்கு சிறப்பு சலுகைகள் அளித்ததாக எழுந்த புகாரின் பேரில் சிறைத்துறை இயக்குநர் ஜெனரல் சந்தீப் கோயல் உள்ளிட்ட 52 சிறை அதிகாரிகள் திகார் சிறையில் இருந்து கடந்த வாரம் மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.