தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “தமிழகத்தில் ஆற்று மணல், கடல் மணல், மலைகள், பாறைகள் என பல கனிம வளங்கள் கொள்ளையடிப்பட்டு, அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுகின்றன. அனுமதி பெறாமல், மலைகளையும், பாறைகளையும், குன்றுகளையும் குடைந்து கல் குவாரி அமைத்து, தமிழகத்தின் கனிம வளத்தை கொள்ளையடிப்பது எல்லை மீறிப் போகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கொரட்டகிரி கிராம மக்கள், கனிம வளக் கொள்ளையைக் கண்டித்து, கிராமத்தைவிட்டு வெளியேறி லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கிராமத்தில் விவசாயம் செய்ய முடியவில்லை என்று கூறிய மக்கள், நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர், இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பினார். ஆனால், கனிமவளக் கொள்ளை நிற்கவில்லை. இதனால், கிராம மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு, வனப் பகுதியில் தற்காலிகமாக டென்ட் அமைத்து தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை பா.ஜ.கவினர் செய்து வருகின்றனர். அண்டை மாநிலங்கள், தங்கள் ஆறுகளையும், மலைகளையும், கனிம வளங்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும்போது, சுற்றுச்சூழல் குறித்த சிந்தனை சிறிதும் இல்லாமல் தமிழகத்தில் தொடர்ந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பா.ஜ.க வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. தமிழக அரசு உடனடியாக கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். கொரட்டகிரி மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு மீண்டும் திரும்ப உடனடியாக நடவடிக்கை வேண்டும். இல்லையெனில் பா.ஜ.க சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.