மொரிஷியஸிலிருந்து வடக்கே 1,122கி.மீ. தொலைவில் தென்மேற்கு இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவு வடக்கு அகலேகா. அங்கு தற்போது கட்டுமான நடவடிக்கைகள் அதிகம் காணப்படுகின்றன. இந்தத் தீவின் மீது பாரதப் பேரரசின் பார்வை, 2015ம் ஆண்டு திரும்பியது. டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க–இங்கிலாந்து கூட்டுத்தளம் போன்று,தென்மேற்கு இந்தியப் பெருங்கடலின் கண்காணிப்புக்கான வான்வழி மற்றும் கடற்படைத் தளமாக வடக்கு அகலேகாவை மேம்படுத்த பாரதம் முடிவு செய்தது.
சுமார் 87 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில், தென்மேற்கு இந்தியப் பெருங்கடலில் வான்வழி மற்றும் மேற்பரப்பு கடல் ரோந்துகளுக்கு உதவுவதற்கும், உளவு நிலையமாகவும் இந்த புதிய தளம் அமைக்கப்படுகிறது. புதிய விமான நிலையம், துறைமுகம், தளவாடங்கள், தகவல் தொடர்பு ஆகிய வசதிகள் இந்தத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான திட்ட விவரங்கள், பாரதம் – மொரீஷியஸ் அரசுகளால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
சுமார் 12 கி.மீ. நீளமும் 1.5 கி.மீ. அகலமும் கொண்ட வடக்கு அகலேகா தீவின் மக்கள்தொகை 300க்கும் குறைவு. சமீப காலம் வரை இந்தத் தீவு, உலகிலிருந்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீவில் பாரதம் அமைக்கும் விமானத் தளமும் வடக்குப் பகுதியிம் அமைக்கும் துறைமுகமும் குறிப்பிடத்தக்கவை. துறைமுகத்தில் 430 பாரத தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தும் பிரதமர் மோடி அரசின் சாகர் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தத் தீவு மேம்படுத்தப்படுத்துகிறது.
பாரத கடற்படைக்கு முக்கியமான தளமாக இந்தத் தீவு அமையும். வடக்கு அகலேகா தீவின் அருகிலுள்ள ரீயூனியன் தீவில் பாரதம், -பிரான்ஸ் கூட்டு கடற்படை ரோந்து பணி அண்மையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஜிபூட்டி நாட்டில் கடற்படைப் பணிகளை மேம்படுத்தும் ஒப்பந்தத்தில் பாரதம், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. பெரிய வணிகக் கப்பல்களுக்கு, குறிப்பாக எண்ணெய் டேங்கர்களுக்கு முக்கியப் பாதையாக உள்ள அகலேகா – மொசாம்பிகா வழித்தடத்தில் கடல்வழி ரோந்து பணியை இந்தப் ஒப்பந்தம் எளிதாக்கும்.
மேலும், சீனாவின் எரிசக்தி இறக்குமதியில் கணிசமான பங்கு வகிக்கும் தென்னாப்பிரிக்காவைச் சுற்றியுள்ள கப்பல் வழிகளைக் கண்காணிக்க பாரத கடற்படைக்கு எளிதாக இருக்கும். பாரதத்தின் கடல்சார் கள விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக மொரீஷியஸ் ஏற்கனவே உள்ளது. அங்குள்ள தீவுகள் அனைத்திலும் கடலோர கண்காணிப்பு நிலையங்கள் செயல்படுகின்றன.
தென்மேற்கு இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சீஷெல்ஸ் அசம்ப்ஷன் தீவில் ராணுவ, தளவாட உள்கட்டமைப்பை உருவாக்கும் திட்டத்தில் சில தடைகள் வந்ததால், மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு நகரும் பாரத கடற்படையின் திட்டத்துக்கு வலுசேர்ப்பதாக வடக்கு அகலேகாவின் தளம் அமைந்துள்ளது.
-ஆனந்த் பரத்வாஜ்