மியான்மரில் ராணுவ அராஜகம்

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயகத்தை மீட்க நடைபெறும் மக்களின் இந்த தன்னெழுச்சிப் போராட்டம் ராணுவத்தால் நசுக்கப்பட்டு வருகிறது. போராட்டக்காரர்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. ராணுவத்தால் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட கொடூரத் தாக்குதல்களால் இதுவரை 737 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவ நடவடிக்கைகளுக்கு அஞ்சி 3,229 பேர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர் என ஏ.ஏ.பி.பி. என்ற மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்கள் கொடூரமாக சித்தரவதை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் 6 பேரின் புகைப்படங்களை மியான்மர் ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில், 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உள்ளனர். அதில், அவர்களின் முகங்கள் கடுமையாக தாக்கப்பட்டு ரத்தக்காயங்களுடன் உள்ளது தெரியவருகிறது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இதுதான் நிலைமை என எச்சரிக்கும் வகையில் மியான்மர் ராணுவம் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.