அறுவை சிகிச்சைக்கு ‘ஹிஜாப்’ மருத்துவ மாணவியர் கோரிக்கை

தங்களுடைய மத அடையாளத்தை கடைப்பிடிக்கும் வகையில், அறுவை சிகிச்சையின்போதும், ‘ஹிஜாப்’ எனப்படும் தலை மற்றும் முகத்தை மறைக்கும் துணி போன்ற ஆடையைப் பயன்படுத்த, கேரள மாணவ – மாணவியர் சிலர் கோரிக்கை விடுத்துள்ளது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.திருவனந்தபுரம் மருத்துவக் கல்லுாரியில் பயிலும் முஸ்லிம் மாணவியர் சிலர், கல்லுாரி முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில் எங்களுடைய மத வழக்கப்படி, ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். இதை, அனைத்து இடங்களிலும், அனைத்து சூழ்நிலைகளிலும் அணிய வேண்டும். தற்போது அறுவை சிகிச்சைகளின்போது அணியப்படும் அங்கி மற்றும் தலையை மறைக்கும் தொப்பி ஆகியவை, எங்களுடைய மத நம்பிக்கையை கடைப்பிடிப்பதற்கு போதுமானதாக இல்லை. இதனால், தலை மற்றும் முகத்தை மறைக்கும் வகையிலான, மருத்துவ அங்கியைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

‘இது குறித்து குழு அமைத்து விவாதித்தே முடிவு எடுக்க முடியும்’ என, கல்லுாரி முதல்வர் லினட் மோரிஸ் பதிலளித்துள்ளார். கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில், ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘ஹிஜாப் அணிவது கட்டாயமல்ல; மத நடவடிக்கை அல்ல’ என்று தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை அளித்து உள்ளது. மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரள மருத்துவ மாணவியரின் இந்தக் கோரிக்கை, புதிய சர்ச்சையை எழுப்பி உள்ளது.