மருத்துவ அடையாள எண்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் 3ம் ஆண்டை தேசிய சுகாதார ஆணையகம் கொண்டாடுகிறது. இந்த வேளையில், தேசம் தழுவிய ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலிகாட்சி வாயிலாக துவக்கி வைத்தார். தேசம் முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு நபருக்கும் பிரத்தியேக அடையாள அட்டை எண் உருவாக்கப்பட்டு அட்டை தரப்படும். இதனை குறித்து பேசிய பிரதமர், இத்திட்டம் தேசத்தின் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் விதத்தில் அடுத்த கட்டத்திற்குள் நுழைகிறது. சுகாதார வசதிகளில் ஒரு புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரும் சக்தி கொண்ட திட்டம் இது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளில், ஆயுஷ்மான் பாரத் யோஜனா செயல்படுத்தப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் துவங்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இலவச தடுப்பூசி இயக்கத்தின் மூலம், பாரதம் முழுவதும் சுமார் 90 கோடி தடுப்பூசி மருந்துகளை வழங்கி சாதனை புரிந்துள்ளது. அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனைக்கு கோவின் தளமும் முக்கிய காரணம். ஏழை, நடுத்தர மக்களின் மருத்துவ சிகிச்சையில் உள்ள சிக்கல்களை நீக்குவதில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் பெரும் பங்கு வகிக்கும்’ என தெரிவித்தார்.