இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்புகளில் முதன்மையான ஹமாஸ் அமைப்புக்கும் இடையே சமீபத்தில் நடைபெற்ற போரில், ஹமாசின் உளவு அமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வந்த 13 மாடி ‘அல் ஜலா’ கட்டடம் குண்டு வீசி தரைமட்டமாக்கப்பட்டது. இதில் அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகை, அல் ஜசீரா தொலைக்காட்சி நிறுவனம் போன்ற பல முக்கிய அலுவலகங்கள் இயங்கி வந்தன. அவர்கள் அந்த இடத்தை காலி செய்ய ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐடிஎஃப்) தலைவர் அவிவ் கோஹாவி, கூறுகையில், ‘அல் ஜலா கோபுரம், ஹமாஸ் உளவுத்துறைக்கு சொந்தமானது. இங்கு, இராணுவத்தின் ஜி.பி.எஸ் கருவிகளுக்கு இடையூறு விளைவிக்கும், ஏவுகணையை திசைத் திருப்பும் பல்வேறு மேம்பட்ட மின்னணு போர் சாதனங்களை நிறுவி இயக்கியது ஹமாஸ். அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகையாளர்கள் தெரிந்தோ தெரியாமலோ, கட்டடத்தின் தரைமட்ட உணவு விடுதியில் ஹமாசின் மின்னணுத்துறை நிபுணர்களுடன் தினமும் காலை காபியைக் குடித்ததாகக் கூறியுள்ளனர்’ என தெரிவித்தார். ஆனால், அசோசியேட்டட் பிரஸ், அங்கு ஹமாஸ் அமைப்பினரே இல்லை என்ற ரீதியில் இதனை மறுத்துள்ளது.