ஆசியப் பொருளாதாரத்தில் இருபெரும் சக்திகளாக இந்தியா. சீனா விளங்குகின்றன. இந்த இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் முரண்பாடு நிலவி வருகிறது.
இந்தியாவில் உள்ள சீன பத்திரிகையாளர்கள் எந்தவித கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக செயல்பட்டு வருவதாகவும், ஆனால், சீனாவில் இந்திய பத்திரிகையாளர்களின் நிலை அவ்வாறு இல்லை என்று இந்திய அரசு இந்த மாதத்தின் தொடக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே விரிசலை மேலும் அதிகரிக்கும் விதமாக இந்திய பத்திரிகையாளரை வெளியேற்ற சீன அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா(பிடிஐ) நிருபர் இந்த மாதத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு சீன அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய ஊடகங்கள் சார்பில்நான்கு நிருபர்கள் இருந்தனர். ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிருபர் கடந்த வார இறுதியில் வெளியேறினார். அதேசமயம், இந்திய அரசு ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி மற்றும் தி இந்து செய்தித்தாளின் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு விசா முடிவடைந்த நிலையில் அதனை புதுப்பிக்க சீன அரசுகடந்த ஏப்ரல் மாதம் மறுத்துவிட்டது.
இந்த நிலையில், பெய்ஜிங்கில் இந்திய ஊடகத்துறை சார்பில் கடைசியாக உள்ள பிடிஐ நிறுவனத்தின் செய்தியாளரையும் இம்மாத இறுதிக்குள் வெளியேற வேண்டும் என்று சீனா கெடு விதித்துள்ளது.
கடந்த மாதம், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், இந்தியாவில் ஒரே ஒரு சீனப் பத்திரிகையாளர் எஞ்சியுள்ளதாகவும், அவரும் இன்னும் விசாவை புதுப்பிப்பதற்காக காத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
முன்னதாக, சின்ஹுவா நியூஸ்ஏஜென்சி மற்றும் சீனா சென்ட்ரல்டெலிவிஷன் ஆகிய இரு பத்திரிகையாளர்களின் விசா புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை மத்திய அரசு நிராகரித்திருந்தது இதற்கு எதிர்வினையாற்றும் வகையிலேயே பெய்ஜிங்கில் உள்ள கடைசி இந்திய நிருபரையும் வெளியேற்ற சீனா தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.