மசாலா பத்திர ஊழல்

மசாலா பத்திர ஊழல் என கூறப்படும் கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தில் (KIIFB) நடைபெற்ற ஊழல்கள் சம்பந்தமாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில் நடைபெற்ற நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக விசாரணைக்காக அமலாக்கத்துறை அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு நோட்டீஸ் வழங்கியது. இதனையடுத்து பீதியடைந்துள்ள அம்மா நில சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் அவசர அவசரமாக கேரள உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். கே.கே ஷைலஜா, ஐ.பி சதீஷ், எம். முகேஷ், இ. சந்திரசேகரன், கடன்னப்பள்ளி ராமச்சந்திரன் ஆகிய எம்எல்ஏக்கள் இதுதொடர்பாக, கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், ‘மசாலா பத்திர விவகாரம் தொடர்பான விசாரணை என்ற போர்வையில் கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் நற்பெயரை களங்கப்படுத்தவும் அழிக்கவும் அமலாக்கத்துறை  முயற்சிக்கிறது. ரிசர்வ் வங்கி அங்கீகரித்த மசாலா பத்திரங்களில் சட்டவிரோதம் எதுவும் இல்லை. மாநிலத்தின் லட்சிய திட்டங்கள் அமலாக்கத்துறையால் குறிவைக்கப்படுகிறது. மத்திய மாநில பிரச்சனைகளில் மோதலை தீர்க்க அரசியலமைப்பு அமைப்புகள் இருந்தபோதிலும் அமலாக்கத்துறையின் நடவடிக்கை சட்டவிரோதமானது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.