கேரளத்தில் ஹிந்து- –முஸ்லிம் பிரச்னையை தூண்ட மார்க்சிஸ்ட் முயற்சி

கேரளத்தில் ஆளும் இடதுசாரிக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பொது சிவில் சட்டத்தைப் (யுசிசி) பயன்படுத்தி ஹிந்து-–முஸ்லிம் பிரச்னையை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள பொது சிவில் சட்டம் தொடர்பாக கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் எம்.வி.கோவிந்தன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சியாகும்.

இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது: பொது சிவில் சட்டத்தை வைத்து ஹிந்து-–முஸ்லிம் இடையே பிரிவினை ஏற்படுத்திய ஆதாயம் அடைவதுதான் பாஜகவின் நோக்கமாக உள்ளது. இப்போது கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதே பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. இதனை ஹிந்து-–முஸ்லிம் பிரச்னை என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், உண்மையில் இது ஒட்டுமொத்த தேசத்தையும் பாதிக்கும் விஷயமாகும் என்றார்.

கேரள மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் இது தொடர்பாக கூறுகையில், ‘தேசிய அளவில் மதரீதியாக பிளவை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் அடைவதே பாஜகவின் உத்தியாக இருந்து வருகிறது. இப்போது, கேரளத்திலும் அதே மாதிரியான அரசியலை நடத்த ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சித்து வருகிறது. குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு (சிஏஏ) எதிராக ஏற்கெனவே நடைபெற்ற போராட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கேரள அரசு இதுவரை ரத்து செய்யவில்லை. எனவே, அவர்கள் அடுத்ததாக பொது சிவில் சட்டத்தை முன்வைத்து போராட்டத்துக்கு அழைப்புவிடுத்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒருபுறம் போராட்டத்துக்கு அழைப்பு விடுப்பதும், மறுபுறம் போராட்டம் நடத்துவோர் மீது வழக்குப் பதிவு செய்வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசின் செயல்பாடாக உள்ளது’ என்றார்.