மணிப்பூர் வன்முறை: அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து கோரி வரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்னையை முன்வைத்து, இரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மாதம் தொடங்கிய மோதல் நீடித்து வருகிறது. பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ராணுவத்தினர் மீதும் வன்முறையாளர்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அரசுசாரா தன்னார்வ அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சிறுபான்மையினராக இருக்கும் குகி பழங்குடியின சமூகத்துக்கு ராணுவ பாதுகாப்பு அளிக்கக் கோரி மற்றொரு தன்னார்வ அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெரும்பான்மை மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்கும் விவகாரம் தொடர்பாக மாநில உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஆளும் பாஜக எம்எல்ஏ ஒருவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது குகி சமூகத்தினர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கோலின் கோன்சால்வே, ‘குகி சமூகத்தினரை அழித்துவிடுவோம் என்று தீவிரவாதிகள் தொலைக்காட்சி செய்தி வாயிலாக வெளிப்படையான மிரட்டலை விடுத்தனர். ஆனால், அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குகி சமூகத்தினருக்கு எதிராக மாநில அரசின் ஆதரவில் இந்த வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘இந்த வன்முறை சம்பவங்களுக்கு எதிர் தரப்பு வழக்குரைஞர் வகுப்புவாத சாயம் பூசக் கூடாது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு 24 மணி நேரத்திலிருந்து 5 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது’ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், ‘மாநிலத்தில் நிலைமை குறித்து புதுப்பிக்கப்பட்ட நிலை அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதில் சட்டம்-ஒழுங்கு நிலைமையை மேம்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், மேலும் வன்முறையாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.