மேற்கு வங்கத்தில் கடந்த 2016ல் நடத்தப்பட்ட ‘நாரதா ஸ்டிங் ஆபரேஷன்’ வழக்கு தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர்கள் ஃபிர்ஹாத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா ஆகியோரை சி.பி.ஐ கடந்த திங்கட்கிழமை கைது செய்தது. அதனைத் தொடர்ந்து சி.பி.ஐ அலுவலக வளாகத்தில் திருணமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் கல்லெறிதல், துணை ராணுவப் படையினரை தாக்குதல் உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபட்டனர். சி.பி.ஐ வளாகத்திற்குள்ளேயே அத்துமீறி அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி சென்றார். அவர் கண்ணெதிரிலேயே வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. அதனை அவர் தடுக்க முற்படவில்லை. இந்நிலையில், அதே நாரதா வழக்கில் பரபரப்புத் திருப்பமாக, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு எதிராகவும் சி.பி.ஐ தற்போது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மமதா இந்த வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். முதல்வராக இவ்வழக்கில் அவர் தனது பணியை சரிவர செய்யவில்லை. முறைகேட்டை ஊக்குவிக்கும் விதமான அவரது தவறான செயல்பாடுகள் அமைந்துள்ளன என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், சி.பி.ஐயின் 123 பக்க மனுவில், மமதாவின் நெருங்கிய உதவியாளரும் திருணமூல் கட்சியின் எம்.பியுமான கல்யாண் பானர்ஜி, மாநில அமைச்சர் மலாய் கட்டாக் ஆகியோரையும் சி.பி.ஐ இதில் குற்றவாளிகளாக சேர்த்துள்ளது. இந்த வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான கோரிக்கையுடன், சிறப்பு நீதிமன்றத்தின் ஜாமீன் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ வேண்டுகோள் விடுத்துள்ளதால், தற்போது மமதா இவ்வழக்கில் நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.