மேற்கு வங்கத்தின் கிழக்கு மேதினிபூரில் ஆளும் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவர் பானு பாக்கின் சட்டவிரோத பட்டாசு ஆலையில் கள்ளத்தனமாக வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அதில் பணிபுரிந்த 9 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமுற்றனர். இந்த வெடிவிபத்து நடந்த இடத்தை பா.ஜ.க தலைவர் சுவேந்து அதிகாரி பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், “இந்த சட்டவிரோத தொழிற்சாலையில் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. பஞ்சாயத்து தேர்தல்கள் நெருங்கிவிட்டன. இதனால், வன்முறைகளை நிகழ்த்த திருணமூல் கட்சியும் வெடிகுண்டு தொழிற்சாலை உரிமையாளர்களும் கைகோர்க்கிறார்கள். பானு பாக் ஒரு உள்ளூர் திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவராக உள்ளார். 2013 முதல் 2018 வரை பஞ்சாயத்து உறுப்பினராகவும் இருந்தார். அவர் மம்தா பானர்ஜியிடம் இருந்து தனக்கான பாதுகாப்பை பெற்றார். தோல்வியடைந்த முதல்வரும் உள்துறை அமைச்சருமான மமதா பானர்ஜி இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். இந்த சம்பவத்திற்கு காவல்துறையும், மாநில அரசும் தான் முழு காரணம். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும்” என கூறினார்.