முக்கிய பயங்கரவாதிகள் கைது

அசாமில் அன்சாருல் பங்களா டீம் (ABT) மற்றும் அல்கொய்தா இந்திய துணைக் கண்டம் (AQIS) ஆகிய இரண்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்த 16 பயங்கரவாதிகள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இதைப் பற்றி, அசாம் காவல்துறை இயக்குநர் ஜெனரல் பாஸ்கர் ஜோதி மஹந்தா கூறுகையில், “இதுதொடர்பான ஒரு வழக்கு ஏற்கனவே தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்.ஐ.ஏ) ஒப்படைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்காக இன்டர்போலுடன் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. இதில் என்.ஐ.ஏ மிகவும் தீவிரமாக செயல்பட்டது. இதேபோன்ற மற்ற வழக்குகளையும் என்.ஐ.ஏ விசாரிக்க விரும்புகிறது என்று நான் நம்புகிறேன். தற்போது பிடிபட்டுள்ளவர்களில் சில முக்கியத் தலைவர்களும் அடங்குவார்கள். இந்த நடவடிக்கையில், அசாம் தவிர மத்தியப் பிரதேசம், திரிபுரா, மேற்கு வங்கத்தில் இருந்தும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றுவிட்டனர். இவர்கள் சுற்றுலா, மருத்துவம் என்ற பெயரில் போலியாக விசா பெற்று பாரதம் வருகின்றனர். பிறகு விசா சட்டத்தை மீறி ஜிஹாத்தை பரப்பவும் மதமாற்றம் செய்யவும் இங்கேயே தங்குகின்றனர். நாங்கள் இவற்றை கண்காணித்து வருகிறோம். விசா சட்டம் மீறப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பயங்கரவாதத்திற்கெதிரான எங்கள் தாக்குதல் தொடரும்’ என தெரிவித்தார். “காவல்துறையின் இந்த நடவடிக்கை உளவுத்துறையின் மிகப்பெரிய வெற்றி, துணிச்சலுக்கு உதாரணம்” என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, கூறியுள்ளார்.