மதுரையைச் சேர்ந்த மூன்று இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) செயற்பாட்டாளர்கள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) கடந்த வெள்ளிக்கிழமை சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் விவேகானந்தன் என்கிற விவேக், மூவேந்தர் நகரைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் மற்றும் ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகன் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சுதந்திர தினம் கொண்டாடுவது குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய விவேக் மீது கடந்த 2020ல் தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இவ்வழக்கை என்.ஐ.ஏ விசாரித்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் சமூக ஊடகக் கணக்குகளின் பதிவுகளை ஆய்வு செய்தபோது அவர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான மாவோயிஸ்டின் சித்தாந்தத்தை பரப்பும் செயல்களில் அது தவறு என தெரிந்தே ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மாவோயிஸ்டு சித்தாந்தத்துக்கு ஆதரவாக துண்டுபிரசுரங்கள், பதாகைகள் போன்றவை மூலம் மாவோயிஸ்டுகளின் பயங்கரவாத சித்தாந்தத்தை பரப்பி வந்தனர் என்பதும் தெரியவந்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.