லவ் ஜிகாத்துக்கு அனுமதியில்லை

மத்தியப் பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் கோவிந்த் சிங், லவ் ஜிகாத் வழக்குகள் அனைத்தும் போலியானவை, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், லவ் ஜிகாத் தொடர்பான வழக்குகளில் சட்டரீதியாக நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் டாக்டர் நரோத்தம் மிஸ்ரா, “லவ் ஜிகாத் பற்றிய உங்களது மற்றும் உங்கள் குரு திக்விஜய் சிங்கின் கருத்துகள் அரசியல் சார்புடையது. காதல் குறித்து எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் காதல் என்ற பெயரில் லவ்ஜிஹாத் செய்பவர்களிடம் தான் பிரச்சனை. மத்திய பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. மாநிலத்தில் வலுவான சட்டம் ஒழுங்கு நிலைமையை உருவாக்குவோம். லவ் ஜிகாத்துக்கு எதிராக மத்திய பிரதேச அரசு கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது. லவ் ஜிஹாத் செய்பவர்கள் லவ் ஜிகாத் என்று கூறவே நடுங்கும் நிலையை நாங்கள் உருவாக்குவோம். காதல் என்ற பெயரில் ஏமாற்றி, தனது சொந்த அடையாளத்தையும் பெயரையும் மறைத்து பெண்களை போலி காதல் வலையில் சிக்க வைக்கும் குற்றத்தை அனுமதிக்க முடியாது. அப்பாவிகளை மதமாற்றம் செய்ய திட்டமிட்டு, அசையா சொத்துகளை அபகரிக்க சதி செய்பவர்களை மத்திய பிரதேச அரசு ஒருபோதும் அனுமதிக்காது” என்றார். முன்னதாக, முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் இந்தூரில் நடந்த சுதந்திரப் போராட்ட தியாகி தந்தியா பில் நினைவு தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “மத்திய பிரதேச மண்ணில் லவ் ஜிகாத் விளையாட்டுகளை எந்த நிலையிலும் அனுமதிக்க மாட்டேன். நம் குழந்தைகளை ஏமாற்றி, திருமணம் செய்து, 35 துண்டுகளாக வெட்டி எறிபவர்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். தேவைப்பட்டால், லவ் ஜிஹாத்துக்கு எதிராக புதிய கடுமையான சட்டம் இயற்றப்படும்” என்று கூறியிருந்தார்.