ஒரு ஊரில் குமரன் தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான். அப்போது அவன் வீட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து உள்ளே வரலாமா? என்று கேட்டனர்.
தந்தை வாருங்கள் அனைவரும் என்றார்.
வந்தவர்களில் ஒருவர், நான் பணம், இவர் வெற்றி, இவரோ அன்பு. நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது. யாராவது ஒருவர்தான் வரமுடியும். எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
குமரனின் தந்தை, நாம் வெற்றியை அழைக்கலாம், எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியே நமக்கே கிடைக்கும் என்றார்.
ஆனால் குமரனோ, அப்பா நாம் பணத்தையே உள்ளே அழைக்கலாமே, நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால், வெற்றி உட்பட அனைத்தையும் பெற்றுவிடலாம் என்றான்.
ஆனால் குமரனின் தாயோ வேண்டாம், அன்பையே அழைத்து மகிழ்வோம். அன்புதான் அனைத்திலும் உயர்ந்தது என்றார்.
தந்தை, மகன் இருவரும் அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டனர். பின் மூவரும், அன்பே உள்ளே வந்து வாழும் காலமெல்லாம் நிலைத்து இருக்கட்டும் என்றனர்.
அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே வந்தனர். உடனே குமரனின் அம்மா, அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம் என்றாள். ஒருவர் மட்டும்தான் வருவோம் என கூறி, மூவரும் வருகிறீர்களே! என்றார்.
அன்பு சொன்னார், நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம். ஆனால் அன்பான என்னை அன்பாக உள்ளே அழைத்தீர்கள். நான் இருக்கும் இடத்தில் பணமும், வெற்றியும் இருக்கும். ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர் என்றார்.
அன்பு உள்ளம் இருந்தால், நம் வாழ்வில் வெற்றியும், தேவையான எல்லா செல்வங்களும் தானாகவே வந்துவிடும்.
அன்பே சிவம்!! அதுவே வாழ்வின் அறம்.
இதையே வள்ளுவர்,
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும். இல்லையேல், அது எலும்புத்தோல் போர்த்திய வெறும் உடலாகும் என்றார்.
ப. கமலயாழினி