பார்லிமென்டில் பெரும்பாலானோர் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேசுகின்றனர். சபை நடவடிக்கைகள், விவாதங்கள் என அனைத்துமே இந்த இரு மொழிகளில் மட்டுமே நடக்கின்றன. இதனால், பிற மொழி பேசும் எம்.பி.,க்கள் பார்லி.,க்கு உள்ளே தடுமாறுகின்றனர்.
‘பரவாயில்லை தமிழிலாவது பேசுங்கள்’ என்ற கோரிக்கையை கூட அவர் ஏற்கவில்லை. காரணம், மொழிபெயர்ப்பு நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. இதற்கு மிகப் பெரிய முன்னேற்பாடுகள் தேவை. ஆனால், லோக்சபாவில் பல எம்.பி.,க்கள் இப்போது தமிழில் பேசுகின்றனரே என்ற கேள்வி எழலாம். ஆனால், நினைத்த மாத்திரத்தில் நம் எம்.பி.,க்கள் எழுந்து தமிழில் பேசிவிட முடியாது. தமிழில் உரை நிகழ்த்த போவதாக ஒரு எம்.பி., முடிவு செய்துவிட்டால், இது குறித்து லோக்சபா செயலகத்துக்கு முன்கூட்டியே முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும். இதையடுத்து, அந்த எம்.பி.,க்காக, ஒரு மொழி பெயர்ப்பாளர் தயார் ஆவார்.
இந்த எம்.பி., பேசவுள்ள உரையை, மொழிபெயர்ப்பாளர் முன்கூட்டியே உள்வாங்கி, சம்பந்தப்பட்ட எம்.பி.,யின் நேரம், சபை அலுவல்களின் வரிசையில் வரும் வரையில் காத்திருந்து, அவர் தமிழில் பேசும் உரையை உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பார். இந்த ஆங்கில உரை, பின் ஹிந்திக்கு மொழி பெயர்க்கப்படும். ஆக, எம்.பி.,யின் தமிழ்ப் பேச்சை, சபையில் உள்ள பிற உறுப்பினர்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மட்டுமே கேட்க முடியும். வேறு எந்த மொழியிலும் கேட்க முடியாது. தமிழில் பேச முடியாது என்பதை போலவே, பிற மொழி எம்.பி.,க்களின் பேச்சை தமிழில் கேட்கவும் முடியாது. உதாரணத்திற்கு, கொங்கணி மொழியில் ஒரு எம்.பி., பேசுகிறார் எனில், அதை நம் எம்.பி.,க்கள் தமிழில் கேட்க முடியாது. இந்த நிலை தற்போது மாறப்போகிறது. தமிழில் பேசும் ஒரு எம்.பி.,யின் பேச்சு, உடனுக்குடன் ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு, உடனடியாக மற்ற மொழிகளுக்கும் மாற்றப்பட உள்ளன. தமிழ் உரையை, ஒடிசாவைச் சேர்ந்த எம்.பி., ஒடியாவில் கேட்கலாம். மேற்கு வங்க எம்.பி., பேசும் வங்க உரையை, ஆந்திர எம்.பி., தெலுங்கில் கேட்கலாம்.
யாருக்கு எந்த மொழியில் கேட்க விருப்பமோ, அவர்கள் தங்கள் முன்பு உள்ள மேஜையின் தொடுதிரையில், மொழியை தேர்வு செய்தால் போதும், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அட்டவணைப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வமான 22 மொழிகளில் அந்த உரையை உடனுக்குடன் கேட்க முடியும். புதிய பார்லிமென்டில் இந்த வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்கனவே பொருத்தப்பட்டுவிட்டன.மொழி பெயர்ப்பாளர்களுக்கு பயிற்சியும் துவங்கிவிட்டது. இதற்காக, நாடு முழுதும் இருந்து 61 பேரை தேர்வு செய்து, மொழி பெயர்ப்பாளர்ககள் பணியில் அமர்த்தி உள்ளனர். தமிழுக்கு மட்டும், ஒரு பெண் உட்பட மொத்தம் நான்கு பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வரும் மழைக்கால கூட்டத் தொடர் முதல், இவர்கள் முழுவீச்சில் களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.